Published : 03 Dec 2021 03:08 AM
Last Updated : 03 Dec 2021 03:08 AM
தஞ்சாவூர் அண்ணாசாலை அருகே மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்ட 54 கடைகளை இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
தஞ்சாவூர் அண்ணா சிலையிலிருந்து கீழவாசல் செல்லும் சாலையில் 54 கடைகள் செயல்பட்டு வந்தன. கடைகள் மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ளதால், அவற்றை இடிக்க மாநகராட்சி வலியுறுத்தியது. ஆனால், வியாபாரிகள் கடைகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதி காரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கீழவாசல் சரபோஜி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் முன்னிலை யில் அண்ணாசிலை அருகே முகப்பு பகுதியில் இருந்த கடையை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது,
அப்போது, இதுவரை வெளியே தெரியாமல் பயன்பாட்டிலும் இல்லாமல் இருந்த 8 அடி ஆழம், 5 அடி அகலமும் கொண்ட 50 ஆண்டுகள் பழமையான மழைநீர் வடிகால் வாய்க்கால் இருப்பது தெரியவந்தது. இந்த வாய்க்காலின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் போடப்பட்டு அதன் மீது கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறும்போது, “கடைகளை இடித்தபோது அதன் கீழ் பெரிய அளவில் வடிகால் வாய்க்கால் இருப்பது தெரியவந்தது.
இது ஜூபிடர் தியேட்டர் அருகே அகழியில் கலக்கும் வகையில் கட்டப் பட்டுள்ளது.
கடைகள் முழுமையாக அப்புறப் படுத்தப்பட்ட பின்னர், வாய்க்காலின் தன்மை குறித்து ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT