Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM
தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள அர்த்த மண்படம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக மழைநீர் கசிவதை தடுத்து, கோயிலின் உறுதித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூரை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழனால் கருங்கற்களால் கட்டபட்ட பெரியகோயில், ஆயிரம் ஆண்டை கடந்து கம்பீரம் குறையாமல் உள்ளது. இந்த கோயிலை யுனெஸ்கோ அமைப்பு கடந்த 1987-ம் ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. கோயிலின் பராமரிப்பை இந்திய தொல்லியல் துறையும், பூஜை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் நிர்வகித்து வருகின்றன.
இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக பெரியகோயிலில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு நீர் கோயிலின் உள்ள தரைகளிலும் தேங்கியுள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள், பக்தர்கள் உடனடியாக மழைநீர் கசிவை தடுத்து கட்டுமானத்தை சீரமைக்க தொல்லியல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெரியகோயில் பாதுகாப்பு சங்க செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, ‘‘தஞ்சை பெரியகோயில் வெயில், மழை என பல்வேறு காலசூழல்களை சந்திக்கும் நிலையில், அதன் தன்மையை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.
தற்போது பெய்து வரும் தொடர்மழையால் அர்த்தமண்டபத் தில் மட்டும் மழை நீர் கசிவு உள்ளதா? அல்லது வேறு பகுதிகளிலும் உள்ளதா என்பதை கண்காணித்து, அதை சீரமைக்க வேண்டும். பெரிய கோயில் இன்டர்லாக் முறையில் கட்டப்பட்டுள்ளதால் கோயில் விமானம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரிசல் எதுவும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறும்போது, ‘‘பெரிய கோயிலில் மழைநீர் கசிய வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அர்த்தமண்டபத்துக்குள் தண்ணீர் எப்படி சென்றது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT