Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் மக்கள் : குன்னூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை

குன்னூர்

குன்னூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், இன்றுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த நகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2001-ம் ஆண்டு நகர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தீயணைப்புத் துறையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமெனில், அதன் கட்டமைப்பு செலவுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென தீயணைப்புத் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. நகராட்சி வசம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு நிலையத்தை, உதகை-குன்னூர் சாலையில் உள்ள வெலிங்டன் பிருந்தாவன் பகுதிக்கு மாற்ற நகராட்சி திட்டமிட்டது. 65 ஆண்டுகள் பழமையானதாக இருப்பதால், தீயணைப்பு நிலையம் உள்ள இடத்தின் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், நகராட்சியால், தீயணைப்புத் துறைக்கு எந்தவொரு தொகையையும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது. எனவே அரசிடம் இருந்து நிதியை பெற்று தீயணைப்பு நிலையத்தை அமைத்துக் கொள்ளுமாறு, அத்துறைக்கு நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்தது. அதன்பின் நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தது. அதன்பின், நகராட்சி தேர்தல் நடக்காததால், பேருந்து நிலைய விரிவாக்க விவகாரத்தை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

மேம்பாலம் அவசியம்

குன்னூர் நகருக்கு செல்லும் சாலையில் மலை ரயில் தண்டவாளமும் அமைந்துள்ளதால், அப்பகுதியில் லெவல் கிராசிங் கேட் அமைக்கப்பட்டுள்ளது. மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு குன்னூர் வரும், மாலை 3 மணிக்கு அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும். அந்த நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால், உதகை-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் நகர் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். ரயில் சென்றவுடன், அப்பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தடுக்க இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது குன்னூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை.

நீலகிரி எக்ஸ்னோரா தலைவர் எம்.கண்ணன் கூறும்போது, ‘‘கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துவதோடு, மேம்பாலமும் கட்டினால் மட்டுமே குன்னூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இதற்கு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x