Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM
தஞ்சாவூர் அருகே அறநிலையத்துறைக்குட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான 700 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு, குத்தகை சாகுபடிக்கு பொது ஏலத்தில் விடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும் புதிதாக அளவீடு செய்து குத்தகைக்கு விடப்படாத நிலங்களை கண்டறிந்து சட்ட விதிகளின்படி பொது ஏலத்தில் விட உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் கோயில் செயல் அலுவலர், ஓய்வுபெற்ற நில அளவர் மற்றும் விஏஓக்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சிலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை பலர் ஆக்கிரமித்து சாகுபடி செய்து வந்தனர்.
இந்த நிலங்கள் அனைத்தையும் கோயில் நிர்வாகம் புல எண் வாரியாக அளவீடு செய்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டறிந்து, அவர்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டன. பின்னர், விவரப்பட்டியல் தயார் செய்து 1,500 லாட்களாக பிரிக்கப்பட்டன.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்பேரில், பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் சுவாமி கோயிலில், நவ.25,26 மற்றும் 29 (நேற்று) ஆகிய 3 நாட்கள் பொது ஏலம் நடத்தி இந்த நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன.
இந்த ஏலத்தில் சிலத்தூர், பின்னையூர், திருநல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம், சதுர்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 800-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்துகொண்டு நிலங்களை சாகுபடிக்காக பொது ஏலத்தில் குத்தகைக்கு எடுத்தனர்.
அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் தென்னரசு தலைமையில், உதவி ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில், செயல் அலுவலர் ராஜகுரு, ஒரத்தநாடு சரக ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மேற்பார்வையில் ஏலம் நடைபெற்றது.
இதுகுறித்து அறநிலையத் துறையினர் கூறியது: இந்து சமய அறநிலையத்துறை கட்டளைகள் சட்டத்தின்படி, முறையாக பொது ஏலம் நடத்தியதால் விவசாயிகள் சட்டப்பூர்வமாக குத்தகைதார்கள் என்கிற அங்கீகாரத்தை பெறுகிறார்கள்.
இதனால், விவசாயிகள் பயிர்க் காப்பீடு போன்ற அனைத்து பலன்களையும் பெற முடியும். இந்த பொது ஏலம் மூலம் ரூ.25 லட்சம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் கோயில்களில் காலப்பூஜைகள் தடையின்றி நடைபெறும், கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT