Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18,911 பேர் மனு அளித்துள்ளனர் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி பெரியார் நகர், கட்டிக்கானப்பள்ளியில் நடைபெற்ற முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை மைய நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 1,874 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 13,14, 20, 21, 27-ம் தேதி மற்றும் இன்றும் (நேற்று) சிறப்பு முகாம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 ஆயிரத்து 911 படிவங்களும், பெயர் நீக்கம் செய்ய 2 ஆயிரத்து 96 படிவங்களும், பெயர் திருத்தம் செய்ய 2 ஆயிரத்து 170 படிவங்களும், தொகுதி பெயர் மாற்றம் செய்ய ஆயிரத்து 302 படிவங்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 479 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி சித்தார்த்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT