Published : 29 Nov 2021 03:08 AM
Last Updated : 29 Nov 2021 03:08 AM
மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், அதற்காக பாடத் திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், இனியும் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை. மழை பாதிப்பு குறைந்த பிறகு, பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் வைத்து, பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இந்த நடைமுறையே தொடரும் என தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் பகுதியில் மழை பாதிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டபோது, விவசாயி ஒருவரை அவமரியாதையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘மக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் தன்னுடைய வயலை வந்து பாருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அந்தநேரத்தில், நான் அவ்வாறு பேசினேன். அது வருந்தத்தக்கதுதான். நான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. அந்த விவசாயியின் 5 ஏக்கர் உட்பட 80 ஏக்கர் விவசாய நிலம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டியது, அத்தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் எனது கடமை. அதை செய்வேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT