Published : 28 Nov 2021 03:07 AM
Last Updated : 28 Nov 2021 03:07 AM
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது:
தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, தோட்டக் கலைத் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவம், சுகாதாரப் பணிகள் துறை, குடிமைப் பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றிட 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களுக்கு உள்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு பாதிப்பு ஏதேனும் ஏற்படும்போது உடனடியாக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைக்க அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குறிப்பாக, நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ள காரணத்தால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT