Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM
முதுகுளத்தூர் அருகே உரத் தட்டுப்பாட்டால் வெளியூர் கிராம விவசாயிகளுக்கு உரம் வழங்கக் கூடாது என விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் அனைத்து விவசாயிகளும் உரமிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நேற்று அருகிலுள்ள அலங்கானூர், காக்கூர், பொசுக்குடிபட்டி, தஞ்சாக்கூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உரம் கேட்டு கூடியிருந்தனர். ஆனால் திருவரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குட்பட்ட திருவரங்கம், எஸ்.தரைக்குடி, கொளுந்துரை கிராம விவசாயிகள் வெளியூர் கிராம விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கூடாது எனவும், தங்களுக்கு முன்னுரிமை அளித்து உரம் வழங்க வேண்டும் எனவும் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் அரை மணி நேரம் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT