Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தநான்கு நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்தது. நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது.குறிப்பாக காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி, சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், வைகுண்டம் பகுதிகளில் மிககனமழை கொட்டியது. தென் தமிழகத்திலேயே இந்த ஆண்டு அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் நேற்று பகலில் மழை குறைந்து காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் பெய்த போதிலும் கனமழை இல்லை. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கியது. குறிப்பாக திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் பகுதியில் தேங்கிய மழைநீர் முற்றிலும் வடிந்தது. திருச்செந்தூர் நகர பகுதிகளில் தேங்கிய மழைநீரும் வடிந்துவிட்டது. திருச்செந்தூர் நேற்று சகஜ நிலைக்கு திரும்பியது. பக்தர்கள் சிரமமின்றி வழக்கம்போல சாமி தரிசனம் செய்தனர்.
காயல்பட்டினம் நகராட்சியில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சூழந்து மழைநீர் நிற்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், வைகுண்டம் பகுதிகளிலும் மழை நீர் ஓரளவுக்கு வடிந்துவிட்டது.
தூத்துக்குடி நகரில் மழைநீர் வடியவில்லை. பெரும்பாலான பகுதிகளில் வீடுகளைச் சுற்றி 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பிரையண்ட் நகர், டூவிபுரம், அண்ணாநகர், குறிஞ்சிநகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி,ராஜீவ் நகர், கதிர்வேல் நகர்,புஷ்பா நகர், கோக்கூர், ஆதிபராசக்தி நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ள தண்ணீரால், மக்கள் 2-வது நாளாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.
தூத்துக்குடி பக்கிள் ஓடை மழைக்கு முன்பாக முறையாக தூர்வாரி சுத்தம் செய்யப்படாததால் தண்ணீர் கடலுக்கு விரைந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தேவர் காலனி, பசும்பொன் நகர், நேதாஜி நகர், தபால் தந்தி காலனி பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் சுமார் 2 அடி அளவுக்கு மழைநீர் தேங்கியது. தரை தளத்தில் உள்ள மகப்பேறு வார்டு உள்ளிட்ட சில வார்டுகள் மற்றும் மின்சார அறை உள்ளிட்ட கட்டிடங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவதியடைந்தனர். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கடுமையாக திண்டாடின.மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மருத்துவமனைக்கு ராஜாஜி பூங்கா வழியாக மாற்று பாதை திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 250 கிலோவாட் திறன் கொண்டஜெனரேட்டர் ஏற்கெனவே இருந்தபோதிலும், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 250 கிலோவாட், 125 கிலோவாட், 65 கிலோ வாட்திறன்களில் மூன்று ஜெனரேட்டர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
மருத்துவமனை அருகேயுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. தரைத் தளத்தில் உள்ள சில நீதிமன்ற அலுவலக அறைகளுக்கு உள்ளே தண்ணீர்சென்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
மாநகராட்சி எல்லையில் 177 இடங்களில் 187 ராட்சத மோட்டார்கள் பொறுத்தப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சாரு தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 11 நிவாரண முகாம்கள் செயல்பட்டன. இந்த முகாம்களில் 503 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினத்தில் 30 செ.மீ. மழை
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 248, காயல்பட்டினம் 306, குலசேகரன்பட்டினம் 158, விளாத்திகுளம் 41, காடல்குடி 52, வைப்பார் 149, சூரன்குடி 56, கோவில்பட்டி 71, கழுகுமலை 36, கயத்தாறு 58, கடம்பூர் 90, ஓட்டப்பிடாரம் 121, மணியாச்சி 87, வேடநத்தம் 80, கீழஅரசடி 59, எட்டயபுரம் 78.9. சாத்தான்குளம் 121, வைகுண்டம் 179, தூத்துக்குடியில் 266.60 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 306 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 118.82 மி.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு ஒரே நாளில் 98 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. 89 குடிசை வீடுகள் பகுதியளவும், 8 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1 காரை வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இந்த வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT