Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

அணைப்பாளையத்தில் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு :

திருப்பூர்

அணைப்பாளையத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அணைப்பாளையத்தில் நொய்யல் பாலத்துக்கு செல்லும் பாதையில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை அணைப்பாளையம் ரயில்வே பாலத்தை அடுத்து நொய்யல் பாலத்துக்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அப்பகுதி பெண்கள் 50 பேர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர், பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அப்பகுதியினர் கூறியதாவது: பள்ளிக்கூடங்கள், கோயில்கள் உள்ள இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்தால் பெண்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறிவிடும். சிறப்பு வகுப்புக்கு சென்று வரும்10, பிளஸ் 2 வகுப்பு மாணவிகள் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் இப்பாதையில் செல்லும் நிலை உள்ளது. அதேபோல் அணைப்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் மிகவும் குறுகியதாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படக்கூடிய பகுதியாகவும் உள்ளது. மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு சமூக விரோத சக்திகள் செயல்படும் பகுதியாக மாறிவிடும் என்பதால் எக்காரணம் கொண்டும், இங்கே மதுபானக் கடை அமைப்பதை ஏற்க முடியாது.

பொது மக்களின் உணர்வுகளை மதித்து இங்கு டாஸ்மாக் மதுபானகடை அமைக்கும் முடிவை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல முடிவை அறிவிக்காவிட்டால் வரும் 29-ம் தேதி மக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிர்ப்பு தெரிவித்து பதாகை

திருப்பூர் மாநகரின் பிரதான போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக புஷ்பா திரையரங்க பேருந்து நிறுத்த பகுதி உள்ளது. இங்கும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் பள்ளி, மருத்துவமனை, வங்கி, பேருந்து நிறுத்தம் என பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த அவிநாசி சாலை புஷ்பா திரையரங்க பேருந்து நிறுத்த பகுதியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், வியாபாரி களுக்கும் நெருக்கடி தரும் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து புஷ்பா திரையரங்க பகுதியில் அனைத்து கட்சிகள் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x