Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு - திருப்பூரில் ரூ.5 லட்சம் இழப்பால் பனியன் தொழிலாளி தற்கொலை :

திருப்பூர்

திருப்பூரில் வீடு கட்ட சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை ‘ஆன்லைன் சூதாட்ட’ விளையாட்டில் இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் பாளையக்காடு ராஜமாதா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனா. தம்பதிக்கு 6 மற்றும் 8 வயதில் மகள்கள் உள்ளனர். இவர் திருப்பூரில் வீடு கட்ட ரூ.5 லட்சத்தை சேமித்து வைத்திருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக, ‘ஆன்லைன் சூதாட்டம்’ விளையாடி வந்தார். அதில், சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை சிறுகச் சிறுக இழந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் சுரேஷ் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, மனைவி மீனா பனியன் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சுரேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றிய திருப்பூர் வடக்கு போலீஸார், வீட்டில் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், ‘ஆன்லைன்’ சீட்டாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டேன். எனக்கு வாழத் தகுதியில்லை. குடும்பத்தினர் என்னை மன்னித்துவிடுங்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மனநல மருத்துவர் வி.சிவராஜ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஆன் லைன் சூதாட்டம், மனதை அடிமையாக்கும். ஸ்டாக்கோம் சின்ட்ரோம் (Stockholm Syndrome) என்று அதற்குபெயர். அந்த போதைக்கு பழகியவர்கள் அதில் இருந்து வெளியேற சிரமப்படுவார்கள். தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், உழைத்தால் முன்னேறலாம் என்ற நேர்மறையான எண்ண ஓட்டம் இல்லாதவர்கள்தான் இப்படி சிக்குகிறார்கள். பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டிருந்தாலும், அது எந்த வழியில் வந்து சேர்கிறது என்பது மிகவும் முக்கியம். எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்றால், இது போன்று பொருளாதாரத்தை இழந்து இறுதியில் ஆபத்தில் சிக்க வேண்டியநிலை ஏற்படும். இன்றைக்கு எவ்வளவு தூரம் செல்போனை ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறோமோ, அந்தளவுக்கு அது மனித வாழ்க்கைக்கும், சமூகத்துக்கும் உகந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x