Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM
உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தாமதமாக வசூலிக்கும் கடை வாடகை தொகைக்கு அபராதம் விதிப்பதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 275 கடைகள் உள்ளன. இதில் 81 கடைகள் தவிர்த்து பிற அனைத்து கடைகளும் பயன்பாட்டில் உள்ளன. நகராட்சி விதிப்படி 3 ஆண்டுக்கு ஒருமுறை மறுபதிவு செய்து கொள்ளவேண்டும். இதில் வாடகை உயர்வும் உள்ளடங்கும். கரோனா பரவலால் தொழில் முடக்கம் காரணமாக வாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே அதிகமாக செலுத்தி வரும் வாடகையை குறைக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் முறையாக மறுபதிவு செய்து வாடகை செலுத்துவோரிடம் இருந்தும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாடகை வசூல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கு, அலுவலக கணினியில் நிலவும் மென்பொருள் குறைபாடு காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வாடகைக்கு தற்போது அபராதத் தொகையுடன் செலுத்துமாறு நிர்பந்தம் செய்வதாக கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாடகைதாரர்கள் கூறும்போது, ‘‘நகராட்சியில் உள்ள கணினி சார்ந்த மென்பொருள் பிரச்சினையால் வாடகைத் தொகை வசூல் செய்யப்படாத நிலையில், தற்போது அபராதத்துடன் செலுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் நிர்பந்திப்பது நியாயமானதல்ல. ஏற்கெனவே கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், நகராட்சியின் இம்முடிவு ஏற்புடையதல்ல. இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சந்தை உட்பட நகராட்சி கடைகள் மூலம் ஆண்டுக்கு நகராட்சிக்கு ரூ.2 கோடி வருவாய் கிடைக்கிறது. 136 கடைகளுக்கான வாடகை முறையாக செலுத்தப்படாமல் உள்ளது. கரோனா தொழில் முடக்கம் முக்கிய காரணமாக முன் வைக்கப்படுகிறது. எனினும் சிலர் முறையாக வாடகை செலுத்தியும், அபராதம் வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT