Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM
நாகப்பட்டினம்/ பெரம்பலூர்/ புதுக்கோட்டை
நாகை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மத்திய சங்க துணைத் தலைவர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். மத்திய சங்க துணைத் தலைவர் சரவணன், கிளை பொருளாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் போக்குவரத்துக் கழகங்களின் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட, வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல, மயிலாடுதுறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, மத்திய சங்க பொருளாளர் ஆர்.சிங்கராயர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். துணைத் தலைவர் எஸ்.சிவானந்தம் சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் தொடங்கிவைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் பேசினார் இதேபோல, அறந்தாங்கியிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT