Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் காஞ்சிபுரம் காவல் சரக துணைத் தலைவர் அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்தது. அங்கு பணி செய்பவர்கள் வெள்ளநீரில் நடந்து சென்று பணி செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே காவல் சரக துணைத் தலைவர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு அருகே வனத்துறை அலுவலர்கள், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களின் குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் பகுதியில் கனமழை பெய்து வந்தது. பல இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்ந்தும், சரி செய்யப்படாமலும் உள்ளன. இதனால் மழைநீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதேபோல் காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் அலுவலகத்தின் உள்ளே சுமார் இரண்டடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கு பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் தண்ணீரில் நடந்து சென்று பணி செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேபோல் மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் குடியிருப்புகளில் தேங்கியிருந்த தண்ணீரை ராட்சத மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர். இருந்தாலும் அந்த தண்ணீரை முழுமையாக அகற்ற முடியவில்லை.
காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் இருக்கும் பகுதியிலேயே மழைநீர் வடிய சரியான வடிகால்கள் இல்லாமல் தண்ணீர் தேங்கி நிற்கும் சம்பவம் காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT