Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM
தமிழக மீன்வளத்துறை சார்பில் உலக மீன்வள தின விழா புன்னக்காயல் மீன் ஏலக்கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் செ.சண்முகையா முன்னிலை வகித்தனர். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 60 பயனாளிகளுக்கு ரூ.16.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
மீன்வள தினத்தை சிறப்பாக கொண்டாட தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்க ரூ.556 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
முன்னதாக மீனவர்கள் பங்கேற்ற கபடி, கைப்பந்து, கயிறு இழுத்தல், மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். சிறந்த மீனவர், மீன்வளர்ப்போர், மீன் பண்ணையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோட்டாட்சி யர் கோகிலா, மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர் அமல் சேவியர், உதவி இயக்குநர்கள் விஜயராகவன், வயலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மீன்வளக் கல்லூரி
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி அமைந்துள்ள தருவைகுளத்தில் ‘மீன்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை’ என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் (பொ) ந.வ. சுஜாத்குமார் தலைமை வகித் தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன், தருவைக்குளம் ஊராட்சி தலைவர் காடோடி உட்பட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி முதல் ஆரோக்கியபுரம் வரையுள்ள 48 மீனவ கிராமங்களில் நேற்று மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி படகு, உபகரணங்களுக்கு பங்குத் தந்தையர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மீனவர்கள் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.குளச்சலில் காணிக்கை மாதா ஆலய பங்குத் தந்தை வில்சன் தலைமையிலும், மணக்குடியில் பங்குத் தந்தை அருள்ராஜ் தலைமையிலும் மீனவர் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர். மீனவ கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. ராமன்துறை கடலில் விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்எல்ஏ., ஆகியோர் பால் ஊற்றி, மலர் தூவி, நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மீனவர் தின பொதுக்கூட்டம் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT