Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் தரிசனம் செய்ய 4-வது நாளாக நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், செல்வாக்கில் உள்ள வர்கள் எளிதாக சென்று தரிசனம் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அனுமதி சீட்டு பெற்ற உள்ளூர் பக்தர்கள் என மொத்தம் 13 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி பிற்பகல் வரையும் மற்றும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். 17-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு 4-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதை அறியாமல், தீபத் திருவிழாவுக்கு மறுநாள், ஆண்டுதோறும் அனுமதிக்கப்படுவது போல், இந்தாண்டும் தரிசனம் செய்ய அனுமதி உள்ளது என்ற நம்பிக்கையில், அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் நேற்று வந்தனர். அவர்களை ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழித்தடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் பலமுறை கேட்டுக்கொண்டும், காவல்துறையினர் தங்களது கடமையில் இருந்து தவறவில்லை. இதனால், கோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு, ஏமாற்றத்துடன் பக்தர்கள் வெளியேறினர்.
அதேநேரத்தில், இந்து சமய அறநிலையத் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, வருவாய் துறை மற்றும் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் சிபாரிசுகளுடன் வந்தவர்களை காவல்துறையினர் தடையின்றி அனுமதித்தனர். அதன்மூலம், அவர்கள் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோயில் உண்டியகளில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் உழைக்கும் பணத்தை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள், கோயில் வாயிற்படியுடன் திரும்பி அனுப் பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT