Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் - நகர செயலாளர்-மாவட்ட நிர்வாகி இடையே மோதல் : தி.மலை அதிமுகவில் சலசலப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நகர செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகி ஆகியோர் மோதிக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால், வேலூர் சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலு வலகத்தில், திருவண்ணா மலை நகர உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செய லாளரும், முன்னான் அமைச் சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

அதில் மிக முக்கியமாக, ‘அதிமுக ஆட்சியில், திருவண் ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளை வரையறை செய்த போது, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பிரித்து, அருகாமையில் உள்ள வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டும். இதற்கு பொறுப்பில் இருந்தவர்கள்தான் காரணம்’ என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, முக்கிய நிர்வாகிகளுடன் தனது அறையில் மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துரையாடினார். அப்போது அவரது முன்னிலையில், நகர செயலாளர் ஜெ.செல்வம் மற்றும் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் சுனில்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, திருவண்ணாமலை நகர்மன்ற தேர்தலை சந்திக்க பணபலம் தேவை என்பதால், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ஆண்கள் என்றால் யார்? போட்டியிடுவது மற்றும் பெண்கள் என்றால் யார்? போட்டியிடுவது என மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் சுனில்குமார் கருத்து தெரிவித்தார். அப்போது அவருக்கும், நகரச் செயலாளர் ஜெ.செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அதில் ஆத்திரமடைந்த ஜெ.செல்வம், மாவட்ட செயலாளரின் மேஜை மீது இருந்த அதிமுக தலை வர்களின் படங்களை தட்டி விட்டு, சுனில்குமார் மீது தண்ணீர் பாட்டிலையும் வீசினார். பதிலுக்கு அவரும் நாற்காலியை தூக்கி ஜெ.செல்வத்தை தாக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்தவர்கள் இருவரது செயலையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், அங்கிருந்து கோபமாக ஜெ.செல்வம் வெளியேறினார். நகர செயலாளரின் செயலானது தவறு என மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சுட்டிக் காட்டினார். மேலும் அவர், சென்னையில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு, நகர்மன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் என தெரிவித்துவிட்டு புறப்பட்டார். நகர செயலாளர் மீது, மாவட்டச் செயலாளரிடம் ஏற்கெனவே வட்ட செயலாளர்கள் பலரும் புகார் மனு அளித்துள்ள நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x