Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

தீப்பெட்டி மூலப்பொருள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

தூத்துக்குடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 10-வதுமாநாடு தூத்துக்குடியில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் நினைவு சுடர் மாநாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோவில்பட்டி நகரில் இருந்து நகரச் செய‌லாளர் எல்.பி.ஜோதிபாசு தலைமையில் எடுத்துவரப்பட்ட மாவட்ட மாநாட்டு கொடியை மாநிலக்குழு உறுப்பினர் ரா.மல்லிகா பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராகவன் கொடியேற்றினார். தலைமைக் குழுவைச் சேர்ந்த கே.பி.ஆறுமுகம், பி.பூமயில், பி.ஜாய்சன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தர ராஜன்மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் வேலை அறிக்கை சமர்பித்தார்.

கூட்டத்தில், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை தனி ஆணையமாக மாற்றி தனியார் மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும். ஸ்மார்ட் சிட்டிஎன்கிற பெயரில் முறையான திட்டமிடலும், ஒருங்கிணைப்பும் இன்றி,மேற்கொள்ளப்பட்டு வரும் தூத்துக்குடி மாநகர் மேம்பாட்டு கட்டமைப்பு பனிகளை முறைப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். வைகுண்டம் தடுப்பணைக்கு கீழ் பகுதியில் லோயர் டேம் அமைத்து மழைக்காலத்தில் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை தேக்கிவைத்து விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். சுமார் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் தீப்பெட்டி தொழில் மூலப்பொருள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.குடிசை மற்றும் பகுதி இயந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டிகளுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்.விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு, அவர் கடைசியாக நீதிமன்ற பணி செய்த கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று (21-ம் தேதி) 2-வது நாள் மாநாடு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x