Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் - 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள், பிரதான சாலைகள் துண்டிப்பு :

செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் உள்ள பாலத்தின் மேல் வெள்ளம் புகுந்ததால் திருவண்ணாமலைக்கு செல்லும் போக்குவரத்து தடைபட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மழைப் பொழிவு இல்லாவிட்டாலும், நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று காலை வரை பெய்த பெருமழையின் பாதிப்பை மாவட்டம் முழுவதும் பரவலாக உணர முடிந்தது.

கனமழையால் செஞ்சி அருகே சிங்கவரம் மலை சுற்றுச் சுவர் சுவர் இடிந்து படியின் மீது விழுந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. செஞ்சி அரசு மருத்துவமனை தரைத் தளம் நீரில் மூழ்கியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட அகரம் கிராம பாலம் உடைந்தது. விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் பிரதானப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் இருந்து விநாடிக்கு 4,600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 32 அடி உள்ள இந்த அணையின் தற்போதைய நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.

விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள பம்பையாற்றுப் பாலத்தின் மேல் வெள்ளம் சென்றதால் விழுப்புரத்தில் இருந்து வேலூர், திருவண்ணாமலை சென்ற வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதே போல செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் உள்ள வராக நதி பாலத்தின் மேல் வெள்ளம் சென்றதால் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை வழித்தடத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

சங்கராபரணி ஆற்று பெரு வெள்ளம் செஞ்சி - சேத்பட்டு செல்லும் பிரதான சாலையை மூழ் கடித்துச் சென்றது.

இதனால் சேத்பட்டு, ஆரணி,வேலூர் பேருந்துகள் நிறுத்தப் பட்டன. செஞ்சி பி ஏரி உபரி நீரானது செஞ்சி திருவண்ணாமலை சாலையில் வெள்ளமாக பெருக் கெடுத்து ஓடுகிறது.

தொடர் மழையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் விழுப் புரம் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட வில்லை. மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை 6 மணி தொடங்கி நேற்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் அளவில்: விழுப்புரம் 182.2, வானூர் 164, திண்டிவனம் 223.5 மரக்காணம் 177, வல்லம் 217, மாவட்ட சராசரி மழை அளவு 177.12 (17 செ.மீ). அதிகபட்சமாக திண்டிவனத்தில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்லூரி களுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x