Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதை விரிவாக்கப் பணிகளால், யானைகள் இடம் பெயர்வதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்னர்.
அடர் வனத்தைக் கொண்டிருக் கும் நீலகிரி மாவட்டம், குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் மலை அடிவாரம் வரை பல்வேறு வகையான காட்டுயிர்களின் புகலிடமாக இருந்து வருகிறது. இந்த அடர் வனத்தின் ஊடே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 14 கொண்டைஊசி வளைவுகளுடன் பாதை அமைக்கப்பட்டது.
யானைகளின் முக்கியமான வாழிடமாக இருந்து வரும் இந்தப் பகுதிக்கு, கெத்தை - கால்லார் வழித்தடத்தைப் பயன்படுத்தும் யானைக்கூட்டங்கள் வறட்சிக் காலங்களிலும், பலா காய்க்கும் பருவங்களிலும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும். இங்கு வந்து குட்டிகளுடன்சில காலம் முகாமிட்டு திரும்பிச் செல்வது வழக்கம். அது மட்டுமல்லாது இதே வனத்தில் நிரந்தரமாக உலவும் சில யானைக் கூட்டங்களும் உண்டு.
இந்த மலைப்பாதை உருவாக்கப்பட்ட போது யானைகளின்பூர்வீக வலசைப்பாதைகள் சிதைக்கபட்டிருந்தாலும், கால மாற்றத்தில் அதற்கு ஏற்ப அதே வனத்தில் புதிய வழித்தடத்தை உருவாக்கி, மேட்டுப்பாளையம் மலை அடிவாரம்முதல் குன்னூர் மலை உச்சி வரை எவ்வித இடையூறின்றி யானைகள் பயன்படுத்திவருவதை சமீபத்தில் ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்தனர்.
சாலை விரிவாக்கம் தடையா?
இந்நிலையில், தற்போது இந்த மலைப்பாதையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் யானைகள் வழக்கமாக பயன்படுத்தும் வழித்தடத்தை மறித்து தடுப்புச் சுவர்களை எழுப்பி தடைபோட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் கூறும் போது, ‘இந்தவனப்பகுதியில் கால்லாறு முதல் குன்னூர் ரண்ணிமேடு வரை நீர்நிலைகள், புல்வெளிகள் இருக்கும்நல்ல வளமான பகுதி. யானைகள்வலசைக்காக இந்த வழித்தடத்தை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றன. இந்தப் புது வழித்தடத்தை பயன்படுத்தும் யானைகள் ஒருசில இடங்களில் சாலையை கடக்க வேண்டியுள்ளது. தற்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலையை விரிவுப்படுத்தி, புதிதாக தடுப்புச் சுவர் கட்டி வருகிறது. இதனால், யானைகள் வனத்துக்குள் செல்ல முடியாமல், அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் நிலை உருவாகும். இது இன்னும் சிக்கலை உண்டாக்கும்’ என்றனர்.
இந்நிலையில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் யானைகள்வழித்தடம் தொடர்பாக இந்த மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ யானைகள் பயன்படுத்தும் பகுதிகளில் சர்வே செய்து 4 மீட்டர் முதல், 8 மீட்டர் வரை யானைகளுக்கான வழித்தடமாக அறிவிக்கச் சொல்லியிருக்கிறோம். இதனை நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்புக்கொண்டனர். வனவிலங்கு நடமாட்டம்அதிகம் இருக்கும் பகுதிகளில்விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற விதிமுறையையும் எடுத்துக் கூறியிருக்கிறோம்’ என்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய கோட்ட பொறியாளர் செல்வன் கூறும்போது, ‘குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறிப்பிட்டஇடங்கள் குறுகலாக இருந்ததால்அகலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் பகுதியில் காட்டு யானைகள்கடந்து செல்வதற்கு நிலையான இடம் விடப்படும் என நீலகிரி வனகோட்ட அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT