Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
நீலகிரி மாவட்டம் உதகையில் 4 மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன்கன மழை பெய்ததால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.உதகையில் 98 மி.மீட்டர் மழை பதிவானது.
வட கிழக்கு பருவ மழை மற்றும்வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகதமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை உதகையில் கன மழை தொடர்ந்து பெய்தது. உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும், கோத்தகிரி, குந்தா, கூடலூர்,குன்னூர் உட்பட மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. உதகையில் 4 மணி நேரத்தில் 98 மி.மீட்டர் மழை பதிவானது.
இதனால், உதகை சுற்றுவட்டார பகுதிகளான காந்தல், கீரின்பீல்ட்ஸ் உட்பட்ட பல பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும், நகராட்சி சந்தைக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. காந்தல் புதுநகர், வண்டிசோலையில் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, பலர் சிக்கிக் கொண்டனர்.
நகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்தனர். தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
பேருந்து நிலைய சாலையில் ரயில்வே பாலம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. தண்ணீரில் சிக்கிய வாகனங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கனமழையின் காரணமாக சாலைகளில்மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாது பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் காலை முதல் மேகமூட்டமான காலநிலை நிலவியது. மதியம் முதல் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுஅபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டகாந்தல், வண்டிசோலை பகுதிகளை உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர்(பொ) கீர்த்தி பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதிஉட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நேற்று காலை வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாகசேரங்கோட்டில் 118 மி.மீட்டர் மழை பதிவானது. உதகையில் 98, கோடநாட்டில் 85, அவலாஞ்சியில் 83, எமரால்டில் 56, தேவாலாவில் 47, கேத்தியில் 43, கோத்தகிரியில் 43, கிண்ணக்கொரையில் 43, கெத்தையில் 42, கூடலூரில் 42, கீழ்கோத்தகிரியில் 41,குந்தாவில் 40, பர்லியாறில் 39, அப்பர்பவானியில் 35, செருமுள்ளியில் 34, பாடந்தொரையில் 31, ஓவேலியில் 27,குன்னூரில் 24, பந்தலூரில் 18, நடுவட்டத்தில் 12.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT