Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மாலைவரை பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதி களில் வெள்ள நீர் சூழ்ந்தது. வழக்கம் போல புதிய பேருந்து நிலையம் தண்ணீரில் மிதந்தது. விழுப்புரம் நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. விக்கிரவாண்டி, திரு வெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மயிலம், வானூர், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங் களிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லம் பகுதியில் 13 சென்டி மீட்டர் மழை பதிவானது.
தளவானூர் அணை தகர்க்கப் பட்டதை தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி மற்றும் பிடாகம்- அத்தியூர் திருவாதி இடையே உள்ள ஆழங்கால் பாலத்தையும் ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று காலை 6 மணி முதல்மாலை 4 மணிவரை மழை அளவு(மில்லி மீட்டரில்): விழுப்புரம் 129.8, வானூர் 92, திண்டிவனம் 128,மரக்காணம் 132, வல்லம் 137, மாவட்டத்தில் மொத்த மழை அளவு 2142.20 சராசரி மழை அளவு; 102.01 மி.மீ பதிவானது.
தரைப் பாலம்
அடித்து செல்லப்பட்டது
திருவெண்ணெய்நல்லூர் அருகே மாரங்கியூர் கிராமத்தின் தரைப் பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள பையூர், கொங்கராயநல்லூர், சேத்தூர், மாரங்கியூர் நான்கு கிராமமும் தீவு போன்று தனித்து விடப்பட்டுள்ளது. 12 கி.மீ பயணத்தில் விழுப்புரம் வரும் இப்பகுதி மக்கள் மாற்று வழியில் 46 கி.மீ. சுற்றி வருகின்றனர்.கல்விக் கூடங்களுக்கு இன்று விடுமுறை
தொடர் கன மழை காரணமாகவும், அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்குமென வானிலை எச்சரிக்கை இருப்பதாலும் மாணவர்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என கல்வி நிலையங்களுக்கும் இன்று (நவ.19) விடுமுறை விடப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT