Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,47,700 மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வனத்துறை நாற்றங்கால்களில் ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 50 மரக்கன்றுகள் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 160 மரக்கன்றுகள் வழங்கப்படும்.
மேலும், இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 21 ஊக்கத் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படும்.
மரக்கன்றுகள் வளர்ந்து அறுவடை செய்யும் போது வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தையும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேக்கு, செம்மரம், கருங்காலி, வேங்கை, சந்தனம், மஞ்சள் கடம்பு, ஈட்டி, மலை வேம்பு, மகோகனி, மருது மற்றும் பூவரசு போன்ற மரக்கன்றுகள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த வேம்பு, புங்கன், புளி, மருது, தான்றிக்காய், பெருநெல்லி, வில்வம் போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி மூலமாகவோ பதிவு செய்து, உரிய அலுவலரின் பரிந்துரையின்படி அருகில் உள்ள வனத்துறை நாற்றங்காலில் மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT