Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே கனமழை பெய்தது. நேரம் செல்ல, செல்ல மழை தீவிர மடைந்தது. திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக் கப்பட்டனர்.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைப்பகுதியில் 4, 6 மற்றும் 9-வது வளைவுகளில் பாறைகள் உருண்டு விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த நெடுஞ் சாலைத்துறையினர் அங்கு விரைந்து சென்று பாறைகளை அப்புறப்புத்தினர். இதற்கிடையே, நேற்று மாலை 6 மணியளவில் 13-வது வளைவில் இருந்த பழமை வாய்ந்த பெரிய மரம் வேரோடு முறிந்து விழுந்ததால் மலை பாதையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடைபட்டது. திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் மழைநீர் குட்டைப்போல் தேங்கிய தால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் வட்டம் கொரட்டி அடுத்த தண்டுகானூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நேற்று முழுமையாக நிரம்பி உபரி நீர்வெளியேறியது.இதைத்தொடர்ந்து, அங்கு ஆய்வு நடத்திய திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஏரிக்கரை அருகாமையில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.
கனமழையால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப் பரித்துக்கொட்டி வருகிறது.
ஜோலார்பேட்டை சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழையால் ரயில் நிலையம் நீரில் மூழ்கியது. 1-வது நடை மேடையை தவிர மற்ற 4 நடைமேடைகள் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் 1-வது நடைமேடையை வழியாக வரவழைக்கப்பட்டு வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், பல மணி நேரம் ரயில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாணியம்பாடி அரசு மருத்துவ மனை வளாகம், அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் நீரால் சூழப்பட்டன. நியூடவுன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் மழையால் நேற்று இடிந்து விழுந்தது.
வாணியம்பாடி பஜார், சி.எல்.சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முழங்கால் அளவுக்கு மழைநீர் அனைத்து சாலைகளிலும் தேங்கியது. வாணியம்பாடி வட்டம், காவலூர் அடுத்த நாயக்கனூர்-கிருஷ்ணாபுரம் செல்லும் சாலை மழையால் சேதமடைந்ததால் அவ்வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அதேபோல, ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள 2 ஏரிகள் நேற்று முழு கொள்ளளவை எட்டியது.
அதிலிருந்து வெளியேறிய உபரி நீர் துத்திப்பட்டு ஊராட் சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக் கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மழைநீரை வெளியேற்றக்கோரி ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் சாலையில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஆம்பூர் பெரியவரிகம் பகுதி யிலும் மழைநீர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் வீடு கனமழையால் நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருவதால் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment