Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM
தி.மலையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 5,051 பயனாளிகளுக்கு ரூ.21 கோடி மதிப்புள்ள கடனுதவிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 68-வது அனைத்திந்திய கூட்டுறவுவார விழாவை முன்னிட்டு ‘கூட்டுறவுகளின் மூலம் வளமாக்குதல்’ விழா நேற்று நடைபெற்றது. விழாவை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து 5,051 பயனாளிகளுக்கு ரூ.21 கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி பேசும்போது, ‘‘தி.மலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட சிறப்பாக பங்காற்றி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் இந்தியாவில் முதன் முறையாக கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.12 ஆயிரம் கோடி மற்றும் நகைக்கடன் ரூ.6 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அதற்கு கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
தி.மலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் பழங்குடியின மக்களிடம் இருந்து சாமை, புளி, தேன் ஆகியவற்றை கொள்முதல் செய்து கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் மேலும் வளர்ச்சியடைய அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்பேத்குமார் (வந்தவாசி), சரவணன் (கலசப்பாக்கம்), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT