Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் பெய்த தொடர் மழையால் கோணக்கடுங்கலாறு கரையில் உடைப்பு ஏற்பட்டு பாய்ந்த வெள்ளநீரில் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மழை குறைந்ததைத் தொடர்ந்து, வயலில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. எனினும், வடிகாலில் உள்ள பிரச்சினையாலும், அவ்வப்போது மழை பெய்வதாலும் வெள்ள நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களிலும் கனமழை பெய்ததால், அப்பகுதியில், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா பருவ இளம் பயிர்கள் நீரில் மூழ்கின.
திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் தஞ்சாவூர் அருகே வரகூர்-ஐம்பதுமேல் நகரம் இடையே கோணக்கடுங்கலாற்றின் தென்கரையில் 30 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது.
இதனால், ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, வரகூர், நடுக்காவேரி, அந்தலி, குழிமாத்தூர் ஆகிய கிராமங்களில் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், அண்மையில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
வெண்ணாற்றில் அகரப்பேட்டையில் பிரியும் கோணக்கடுங்கலாறு, நாகத்தி கிராமத்தில் வெட்டாற்றில் கலக்கிறது. இதன் மூலம் ஏறக்குறைய 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆனால், ஐம்பதுமேல் நகரம் - அந்தலி கிராமங்களை இணைக்கும் தரைப்பாலத்தில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து, தரைப்பாலம் மூடப்பட்டுள்ளதால், நீரோட்டம் தடைப்பட்டு வரகூர் - ஐம்பது மேல் நகரம் இடையே கரையில் உடைப்பு ஏற்பட்டு, சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என விவசாயிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் 50 விவசாயிகள் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ள செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாலும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் குறைந்த அளவு விவசாயிகளே பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தரைப்பாலத்தில் ஏற்படும் அடைப்பால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இத்தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அடைப்பு ஏற்பட்ட இடத்தில் விவசாயிகளுடன் வட்டாட்சியர் நெடுஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT