Published : 16 Nov 2021 03:09 AM
Last Updated : 16 Nov 2021 03:09 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு மற்றும் கிணறு பாசனம் மூலம் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் 2 போக நெல் சாகுபடி மேற்கொள்கின்றனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முதல் போக சாகுபடியும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 2-ம் போக சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்போக சாகுபடிக்காக விவசாயிகள் நிலங்களை சீர் செய்து நெல் நாற்று நடவு செய்தனர். தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்த மழை நீரில் நெற்கதிர்கள் மூழ்கியும், சாய்ந்தும் சேதமானது. குறிப்பாக, சூளகிரி, அவதானப்பட்டி, திம்மாபுரம், போச்சம்பள்ளி, வெப்பாலம்பட்டி, சந்தூர், மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் அதிகளவில் சேதமாகி உள்ளது. இதனால் நெல் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் கடும் இழப்பினை சந்தித்து உள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, நெற்கதிர்கள் நன்கு விளைந்திருந்த நிலையில், மழையால் புகையான் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நெற்கதிர்களை அகற்றிவிட்டோம். மீதமுள்ள நெற்கதிர்கள் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் பரவலாக பெய்த கனமழையால், ஏரிக்கரை உடைந்து வயலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே மழையால் பாதிக்கப் பட்ட நெல்வயல்களை நேற்று வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குநர் முருகன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் கூறும்போது, மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 120 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
ஓட்டு வீடு இடிந்தது
கிருஷ்ணகிரி நகரில் நேற்று மாலை 5.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக நீடித்தது. பெரியார் நகர், காவேரிப்பட்டணம் ஒன்றியம் நகர் பகுதிகளில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து வெளியேற வழியில்லாமல் தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசியது. மேலும் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளால் மக்கள் அச்சம் அடைந்தனர்.போச்சம்பள்ளி அருகே குள்ளனூர் - கொய்யாதோப்பு பகுதியைச் சேர்ந்த முருகம்மாள் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல, விளங்காமுடி கிராமத்தில் மாதேஷ் என்பவரது ஓட்டுவீடு இடிந்து விழுந்தது. இப்பகுதியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன் தினம் அதிகபட்ச அளவாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 13.20 மில்லி மீட்டர் மழை பெய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT