Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM
ஈரோடு மாநகரப் பகுதியில் செயல்படும் பல்வேறு வங்கிகளின் 7 ஏடிஎம் மையங்களில், கடந்த 2019-ம் ஆண்டு ரூ.1.32 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஈரோட்டில் நடந்த கொள்ளை சம்பவம் போலவே, சேலம் மாவட்டம் சங்ககிரியில் கடந்த மாதம் 17-ம் தேதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் மர்மகும்பல் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பூபாலன் (25), ஜெகதீஸ் (27), முகமது ரியாஸ் (20) ஆகிய 3பேரை கைது செய்தனர். இதில், பூபாலன், ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், இதன்மூலம் அவரது கூட்டாளிகளுடன் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஈரோடு ஏடிஎம்-களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பூபாலனின் கூட்டாளிகள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன்(27), ஆண்டிகாட்டைச் சேர்ந்த கேசவன் (24), வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (24), திருச்செங்கோட்டைச் சேர்ந்த குமார் (27) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT