Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM
சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்திருப்பது இந்திய விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய சமையில் எண்ணெய் தேவையில் 70 சதவீதம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சமையல் எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக, அவற்றின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்கத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சுத்தகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன்ஸ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இந்தியாவில் தயாராகும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றின் விலை வெகுவாக வீழ்ச்சியடையும். இதனால் இந்திய விவசாயிகள் பெரிய அளவிலான இழப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இந்தியாவில் தயாராகும் சமையல் எண்ணெய்க்கு மானியம் வழங்காத அரசுகள், இறக்குமதி எண்ணெய்க்கு மட்டும் மானியம் வழங்குகிறது. இறக்குமதி எண்ணெய்யை ரேஷன்கடைகளிலும் விநியோகிக்கிறது. இது இந்திய விவசாயிகளுக்கு அரசு செய்யும் துரோகமாகும்.
எனவே, சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைப்பதற்கு பதிலாக, பலமடங்கு அதிகரிப்பதோடு, இந்தியாவில் தயாராகும் எண்ணெய்க்கு, மானியம் வழங்கி சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT