Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM

குறிஞ்சிப்பாடி, குமராட்சி பகுதிகளில் 18 ஆயிரம் ஏக்கர் நீரில் மூழ்கின - கொள்ளிடத்தில் விநாடிக்கு 35 ஆயிரம் அடி திறப்பு :

கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கீழணை யில் இருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, குமராட்சி உள்ளிட்ட 14 வட்டாரத்திலும் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்தது.

சில இடங்களில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிஞ்சிப்பாடி பகுதியில் விளைநிலங்களில் இருந்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. விருத்தாசலம், மங்களூர், நல்லூர் வட்டாரங்களில் ஆயிரம் ஏக்கர் பருத்தியும், 3 ஆயிரத்து 500 ஏக்கர் உளுந்தும், 500 ஏக்கர் மக்காச்சோளமும் பாதிப்படைந்துள்ளன. மற்ற வட்டாரங்களில் 13 ஆயிரம் ஏக்கர் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்த விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் கீழணைக்கு மேட்டூர் தண்ணீருடன் மழை தண்ணீரும் சேர்ந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்த வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வடவாறு, குமிக்கி மண்ணியாறு உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் அனுப்பி வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கீழணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நேற்றைய மழையளவு, புவனகிரியில் 60 மிமீ, சேத்தியாத்தோப்பில் 58 மிமீ, விருத்தாசலத்தில் 44 மிமீ, சிதம்பரத்தில் 38.6 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 36 மிமீ, பண்ருட்டியில் 28 மிமீ, லால்பேட்டையில் 25.2 மிமீ, வேப்பூரில் 25 மிமீ, கடலூரில் 20.5 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 18.4 மிமீ, பரங்கிப்பேட்டையில் 17.4 மிமீ, கீழ்செருவாயில் 14 மிமீ மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x