Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை அடுத்த எம்.புளியங்குளம் அருகே போத்தநதி கிராமத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
போத்தநதியில் உள்ள பழமையான கோயிலில் தமிழ் கல்வெட் டுகள் இருப்பதாக ஊராட்சி தலைவர் விநாயகமூர்த்தி தகவல் அளித்தார். அதன்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான து.முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், கருப்பசாமி ஆகியோர் கள ஆய்வுசெய்தனர்.
இதில் சிதைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு எனக் கண்டறியப்பட்டது.
இது குறித்து உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறியதாவது: செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கவுசீக நதிக் கரையின் மேற்குப் பகுதியில் போத்தன் என்ற சிற்றரசர் ஆட்சி புரிந்ததாகவும், அவரது பெயரில் போத்தநதி என்ற ஊர் வந்ததாகவும் தெரிகிறது. இவ்வூரின் தெற்கு பகுதியில் போத்தன் ஊருணி அருகே பாழடைந்தநிலையில் கருவறை, கோபுரம், முன் மண்டபத்துடன் கோயில் கண்டறியப்பட்டன. கோயிலில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 8 வரி சொற்கள் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில், ‘திருவாய்க்கேழ்விக்குமேல் ஸ்ரீ கோமாற பன்மரன் திரிபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு மாடக்குழக்கு மதுரை திருவாலவாயுடையார் கோயில்’ என்ற வரிகள் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்தைச் (1216-1239) சேர்ந்தது. திருவாலவாயுடையர் என்ற சிவன் கோயிலுக்கு சந்தியா தீபமேற்ற நிலம் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். இக்கல்வெட்டின் காலம் கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT