Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

திருச்சி மாவட்டத்தில் - மழை பாதிப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர் :

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் நேரிட்ட பாதிப்புகளையும், நீர்நிலைகளையும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளையும், வயல்களையும் மழைநீர் சூழ்ந்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்றவும், வடியச் செய்யவும் உரிய அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வழங்கி வருகிறார்.

அந்தவகையில், திருச்சி உறையூர் பெஸ்கி நகர், தியாகராஜ நகர், பாத்திமா நகர் ஆகிய இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருப்பதை நேற்று பார்வையிட்ட ஆட்சியர், மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்பை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, முசிறி ஒன்றியம் தண்டலைப்புத்தூர் அய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிறைந்து செல்வதை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ரெட்டியப்பட்டி ஏரியில் நீர் நிறைந்து, வரத்து வாய்க்காலின் வழியாக நாகநாயக்கன்பட்டி ஏரிக்கு தண்ணீர் செல்வதையும், சிறுநாவலூர் ஏரியில் நீர் நிறைந்து அய்யாறு ஆற்றுக்குச் செல்வதையும் பார்வையிட்ட ஆட்சியர் சு.சிவராசு, பொதுமக்களுக்கு பாதிப்பு நேரிடாத வகையில் தொடர்ந்து கண்காணிப்புடன் பணியாற்றுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிளியூர், அரசங்குடி, பத்தாளப்பேட்டை, நடராஜபுரம் ஆகிய கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள நெல் வயல்களை ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மழைநீரால் நேரிட்டுள்ள பயிர் சேதத்தைக் கணக்கெடுத்து அறிக்கை அளிக்குமாறு வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய் ஆகிய துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் செ.ஸ்டாலின்குமார் (துறையூர்), ந.தியாகராஜன் (முசிறி), மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம், அரியாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பி.சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x