Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM
தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 157 ஏரிகள் நிரம்பின; பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின்கீழ் உள்ள 574 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி, 157 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
இதில், கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின்கீழ் உள்ள 324 ஏரிகளில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், பூண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் உட்பட 86 ஏரிகளும், ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின்கீழ் உள்ள 250 ஏரிகளில் ஊத்துக்கோட்டை, ஆரணி, கவரப்பேட்டை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 86 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்த ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீரால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் மூழ்கி வருகின்றன. குறிப்பாக, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளான தத்தமஞ்சி, மெதூர், சின்னகாவனம், வெள்ளாத்தூர், வெள்ளகுளம், பி.என்.கண்டிகை, குமரசேரலபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT