Published : 10 Nov 2021 03:08 AM
Last Updated : 10 Nov 2021 03:08 AM
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களை அனுமதிக்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன.
விஷ்வ இந்து பரிஷத் மாநிலத் துணை தலைவர் சக்திவேல், மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார், ஆர்எஸ்எஸ் கோட்ட பொறுப்பாளர் ராஜசேகர் ஆகியோர் தி.மலையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறும்போது, “கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த 7-ம் தேதி 13 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 8-ம் தேதி 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், உள்ளூர் பக்தர்களுக்கு நேரடி அனுமதி சீட்டு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சிலர் பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளனர். தீபத் திருவிழாவுக்கு சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கவில்லை என்றால் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ராஜகோபுரம் முன்பு போராட்டம் நடத்தப்படும். குழந்தை வரம் கேட்டு வேண்டிக்கொண்டவர்கள், கரும்பு தொட்டில் சுமந்து மாட வீதியில் வலம் வர அனுமதிக்க வேண்டும்.
ஆன்லைன் பதிவு செய்யும் போது சர்வர் பிரச்சினை உள்ளதால், எளிதாக முன்பதிவு செய்ய முடியவில்லை. மேலும் முன்பதிவு செய்யப்பட்ட சான்றில் அண்ணாமலையார் படத்தை புறக்கணித்துள்ளனர். ராஜகோபுரத்தை மூடிவிட்டு மூலவருக்கு மகா தீபாராதனை காண்பித்து வருகின்றனர். இது ஆகம விதியில் இல்லாத ஒன்றாகும். 10 நாள் விழாவையும், மாட வீதிகளில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்ப வேண்டும். அன்னதானம் வழங்க அனுமதிக்க வேண்டும்.
கோயில் உள்ளே காவல்துறை யினர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களுக்கான விழா.அதிகாரிகளுக்கான விழா கிடையாது. பக்தர்களை அனுமதிக்காதபோது, பணியில் உள்ள அதிகாரிகளை தவிர மற்ற அதிகாரிகளை கோயில் உள்ளே அனுமதிக்கக்கூடாது. கார்ப்பரேட் நிறுவன விழாவாக நடத்தாமல், பக்தர்களுக்கான விழாவாக நடத்த வேண்டும். நவம்பர் 10-ம் தேதி முதல் நகரின் வெளியே பேருந்துகளை நிறுத்தும் முடிவை திரும்ப பெற வேண்டும்.
பக்தர்கள் யாரையும் அனுமதிக் காத நிலையில், பேருந்துகளை வெளியே நிறுத்துவது ஏன்?. 10 ரூபாய் கட்டணத்தில் பேருந்து பயணித்துவிட்டு, ஆட்டோவில் பயணிக்க 100 ரூபாய் செலவு செய்ய முடியுமா?. நகரில் வழக் கம்போல் பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT