Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

திருச்சி மாவட்டத்தில் - விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த மழைநீர் :

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் ஆறுகண் மதகு பகுதியில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. உடன் மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன். (அடுத்த படம்) திருச்சி குழுமணி சாலை ராஜலட்சுமி நகரில் மழைநீர் புகுந்த வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் மீட்டு அழைத்து வந்த தீயணைப்பு வீரர்கள்.படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்யாவிட்டாலும், கரூர், புதுக்கோட்டை மாவட்டங் களில் அதிக அளவில் பெய்த காரணமாக திருச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அதிக அளவில் மழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது லேசாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்பறநாட்டில் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 17.4, துறையூர் 12, கொப்பம்பட்டி 10, நவலூர் குட்டப்பட்டு 9.6, திருச்சி மாநகரம் 9, சிறுகுடி 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பிற இடங்களில் சொற்ப அளவிலேயே மழை பெய்துள்ளது.

இருந்தபோதிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், விராலிமலை, கீரனூர் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கோரையாறு மற்றும் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதேபோல, கரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக காட்டாறுகள், கட்டளை மேட்டு வாய்க்கால் வழியாக முதலைப்பட்டி, கோப்பு, கொடியாலம், கிளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. உய்யக்கொண்டான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் புலிவலம் மணற்போக்கி வடிகால் உள்ளிட்டவற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த பகுதியில் உள்ள கொடிங்கால் வடிகால் ஓடை நீர் வடிய வழியில்லாமல் கொடி யாலம் பகுதியில் உள்ள குடியிருப் புகளையும், வாழை மற்றும் நெல் வயல்களையும் சூழ்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவ.சூரியன் கூறுகையில், ‘‘புலிவலம் மணற்போக்கியில் திறக்கப்பட்ட தண்ணீரால் கரையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு எந்தநேரமும் கரை உடையும் அபாயம் உள்ளது. இவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இவற்றை குடிமராமத்துத் திட்டத்தில் தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி யிருந்தால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்’’ என்றார்.

திருச்சி மாநகரில்…

திருச்சி மாநகரில் பல்வேறு வார்டுகளில் நடைபெற்று வரும் புதைசாக்கடை அமைக்கும் பணி களால் சாலைகள் சேதமடைந் துள்ளன. இதனால், சாலைகள் சேறும், சகதியுமாக மக்கள் வாகனங் களில் செல்வதற்குக் கூட அச்சப்பட வேண்டிய நிலையில் உள்ளன. குழுமாயி அம்மன் கோயில் கோரையாறு- உய்யக்கொண்டான் வாய்க்கால்களில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டதால் ஆறுகண் மதகு திறக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக உறையூர்- குழுமணி சாலையை ஒட்டியுள்ள லிங்க நகர், செல்வ நகர், ராஜலட்சுமி நகர், சீதா லட்சுமி நகர் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு இடங்களில் குடியி ருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதிகளை ஆட்சியர் சு.சிவராசு, மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரஹ்மான், முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களை தீயணைப்புப்படை வீரர்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

மாநகராட்சி சார்பில் நீர்சூழ்ந்த பகுதிகளில் மழைநீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணராய புரம் அருகேயுள்ள பிச்சம்பட்டி, லாலாபேட்டை அருகேயுள்ள நந்தன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x