Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மழையின் தாக்கம் இருந்தது. பின்னர் பிற்பகலில் இருந்து மழையின் தாக்கம் குறைந்து, மழைச் சாரலாக இருந்தது. அரசு மற்றும் தனியார் பணிக்கு சென்றவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள தாழ்வான இடங்களை மழை நீர் சூழ்ந்தது. வணிக வீதிகள் வெறிச்சோடின. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 30 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக செங்கம் பகுதியில் 76.4 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலும் ஆரணியில் 15.5, செய்யாறில் 32, ஜமுனாமரத்தூரில் 27, வந்தவாசியில் 25, போளூரில் 32.6, திருவண்ணாமலையில் 10, தண்டராம்பட்டில் 33, கலசப் பாக்கத்தில் 15, சேத்துப்பட்டில் 20, கீழ்பென்னாத்தூரில் 38.2, வெம்பாக்கத்தில் 30 மழை பெய்துள்ளது.
3 அணைகளில் நீர் வெளியேற்றம்
செங்கம் மற்றும் ஜவ்வாது மலையில் பெய்து வரும் கனமழையால் குப்பநத்தம் மற்றும் செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம், 57.07 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு வரும் 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படு கிறது. அணையில் 647 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இதேபோல், 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 54.32 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 128 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 208 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. மேலும், 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 20.83 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 53 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 75 மில்லி யன் கனஅடி தண்ணீர் உள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
அதேபோல், நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் ஓடை களிலும் நீர் வரத்து அதிகம் உள்ளது. இதனால் ஆறுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதி அருகே வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர். கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT