Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
கண்ணகி, முருகேசன் கவுரவக் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகும் பாதிக்கப்பட்டோருக்கு மிரட்டல் தொடர்வதால் பாதுகாப்புக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக முருகேசன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தா சலம் அருகே குப்பநத்தம் புதுக் கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி-முருகேசன் 2003-ல்கவுரவக் கொலை செய்யப் பட்டனர்.
இந்த வழக்கில் 18 ஆண்டுக்குப் பிறகு கடலூர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. ஒருவருக்கு தூக்கு தண்டனை, 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் முருகேசன் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதுரையில் பவுத்த பொதுவுடமை இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, சித்தி சின்னப்பிள்ளை, சித்தப்பா அய்யாச்சாமி, தம்பிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
பின்னர் பவுத்த பொதுவுடைமை இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பொ.ரத்தினம் கூறியதாவது:
கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் காவல் அதிகாரிகள் உட்பட பலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆதிக்க மனநிலையில் இருப்பவர்கள் தங்களை திருத்திக் கொள்ள தயாராக இல்லை. தீர்ப்பு வந்த பிறகும் முருகேசன் குடும்பத்தினருக்கு எதிரான கொடுமை நீடிக்கிறது.
முருகேசன் பெற்றோர் மற்றும் தம்பிகளை அக்.14-ல் 7 பேர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதே காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் வழக்கில் தண்டிக்கப்பட்டும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் முருகேசன் குடும்பத்தினருக்கு இதுவரை போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை. இந்த வழக்கை நடத்தியதற்காக என்னையும் பலர் மிரட்டி வருகின்றனர். இதனால் முருகேசன் குடும்பத்தினருக்கும், எனக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக் குத் தொடர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முருகேசன் பெற்றோர் மற்றும் தம்பிகளை அக்.14-ல் 7 பேர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT