Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சுப்பன் கால்வாயில் தண்ணீர் செல்லாததால் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருவாதவூர் மதகு அணையில் இருந்து தொடங்கும் உப்பாறு தமறாக்கி, நல்லாகுளம், பெரியகோட்டை வழியாக செய்களத்தூர் கண்மாயை அடைகிறது. அதன் பின் சின்னக்கண்மாய், கல்குறிச்சி கண்மாய், ஆலங்குளம் கண்மாய் வழியாக வைகையில் கலக்கிறது.
இந்நிலையில் வெள்ளம் வரும் காலங்களில் உப்பாற்றில் இருந்து வரும் உபரிநீரை மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள 26 கண்மாய்கள் பயன்பெறும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இக்கால்வாய் கல்குறிச்சி பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் உப்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு செய்களத்தூர் பெரிய கண்மாய் நிரம்பியது. தொடர்ந்து கல்குறிச்சி கண்மாய் நிரம்பி வெளியேறும் தண்ணீர், மேடாக இருப்பதால் சுப்பன் கால்வாயில் செல்லவில்லை. இதனால், இந்த கால்வாயிலிருந்து தண்ணீர் பெறும் வலச்சனேந்தல் கண்மாய், வடக்கு சந்தனூர் கண்மாய், வேதியரேந்தல் கண்மாய் உள்ளிட்ட 26 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கவில்லை.
அதேநேரம் உப்பாற்றில் வரும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக செல்லாமல் வேறு வழியாக சென்று ஆலங்குளம் கண்மாயில் நிரம்பி மறுகால் பாய்ந்து வைகை ஆற்றில் கலந்து வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சுப்பன் கால்வாய் மேடாக இருப்பதால் தண்ணீர் செல்லவில்லை. இதையடுத்து வேறுவழியில் கொண்டு செல்ல மாற்றுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT