Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், முன்னெச்சரிக்கையாக நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துவதுடன், அவற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் பயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கண்காணிப்பில் 3,824 குளங்கள், நீர்வள ஆதாரத் துறையின் கீழ் 961 கண்மாய்கள், கல்லணைக் கால்வாய் பாசன பிரிவின் கீழ் 170 கண்மாய்கள், நகர்புற உள்ளாட்சித் துறையின் கீழ் 107 குளம், கண்மாய்கள் என மொத்தம் 5,062 குளம், கண்மாய்கள் உள்ளன.
தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து தற்போது தீவிரமடைந்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக கல்லணைக் கால்வாயின் கடைமடை கண்மாயான மும்பாலை கண்மாய் உட்பட மொத்தம் 219 குளம், கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.
1,255 குளம், கண்மாய்கள் 75 சதவீதமும், 3,176 குளம், கண்மாய்கள் 50 சதவீதமும், 412 குளம், கண்மாய்கள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. முழுமையாக நிரம்பிய நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குளத்தூர் அருகே லெட்சுமணப்பட்டி ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருமயம் அருகே பேரையூர் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
குன்றாண்டார்கோவில் அருகே உடக்குளம் நிரம்பி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், சேதுராவயல் கிராமத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அருகே மூக்குடி ஊராட்சி எழில் நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர்.
இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், சாகுபடி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக மழை பெய்தால் ஏராளமான நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் சூழல் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியது:
மாவட்டத்தில் 1,500 குளம், கண்மாய்களில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழைபெய்தால், பல்வேறு நீர்நிலைகளின் கரைகளில் உடைப்பெடுக்கும் சூழல் உள்ளது. எனவே, கரைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT