Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், நீர்நிலைகளை பார்க்கவோ, குளிக்கவோ கூடாது என ஆட்சியர் குமாரவேல் பாண்டின் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. நேற்றும் அவ்வப்போது மழை விடாமல் பெய்தது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றுப்பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பியுள்ளது. 11.50 மீட்டர் உயரமுள்ள மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கவுண்டன்ய ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. எனவே, கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோர்தானா, கொட்டாரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, ஜங்காலப்பள்ளி, ரங்கசமுத்திரம், அக்ராவரம் மீனூர், ஆண்டகான்பட்டி, பெரும்பாடி, மீனூர், மூங்கப்பட்டு, சீவூர், குடியாத்தம், இந்திராநகர், ஒலக்காசி, சித்தாத்தூர், ரேணுகாபுரம், ஐதர்புரம் கிராமங்களில் வசித்து வரும் மக்கள் மற்றும் ஆற்றின் கரையோரம் தாழ்வானப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
கவுண்டன்ய ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆற்றில் குளிப்பதோ, துணிகளை துவைப்பதோ, ஆற்றுநீரை வேடிக்கை பார்க்கவோ யாரும் செல்ல வேண்டாம். குறிப்பாக, சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் ஆற்றின் அருகே செல்லக்கூடாது.
தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஏரிகள், குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாலாறு மற்றும் பொன்னையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண்: 1077 மற்றும் 0416-2258016, வாட்ஸ் அப் எண் : 93840-56214 என்ற எண்ணில் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT