Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையாலும், பூச்சி தாக்குதலாலும் கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக முள்ளங்கி, வெண்டை, கத்தரிக்காய் போன்றவை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, மத்தூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கத்தரிக்காய் சாகுபடியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஜனவரி, மே ஜூன் என 3 பட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கத்தரிக்காய் நடவு செய்து 40 நாட்களில் அறுவடைக்கு வரும், அடுத்து 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும். இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்கள் உள்ளூர் வாரச்சந்தைகள், உழவர் சந்தை மற்றும் அறந்தாங்கி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நிகழாண்டில், அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்ட கத்தரிக்காய் நாற்றுகளில், காய்கள் சாகுபடிக்கு வந்துள்ளது. தொடர் மழையாலும், பூச்சி தாக்குதலாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக மத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சம்பத்குமார் கூறும்போது, தற்போது கத்தரிக்காய் கிலோ30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் இருந்தாலும், தொடர் மழையால் கத்தரிக்காய்களில் அழுகல், பூக்களில் தண்ணீர் தேங்கி உதிர்ந்து கீழே விழுவதால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகள் தெளித்தும் பலனில்லை. ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகளுக்கு மேல் கத்தரிக்காய் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது மகசூல் சரிபாதியாக குறைந்துள்ளது. நல்ல விலை இருந்தும், மழை, பூச்சி தாக்குதல் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT