Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM

கிருஷ்ணகிரி பகுதியில் மழையால் - அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதம் : விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி பகுதியில் பெய்த மழையால் விளைநிலங்களில் சாய்ந்து சேதமான நெற்கதிர்கள்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் முழ்கின. பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் ஆண்டுக்கு 2 போகம் விவசாயிகள் நெல் விளைவிக்கின்றனர். அதன்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முதல் போக சாகுபடியும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 2-ம் போக சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் கீழ் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி உட்பட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிர்கள் நடவு செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் முதல் போக சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கியும், சாய்ந்தும் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அவதானப்பட்டி பகுதி விவசாயிகள் கூறும்போது, தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையால் விளைநிலத்தில் சரிந்துள்ளன. இதனை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x