Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை தொடர்ந்து உறுதிப்படுத்த கோரி - கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பாமகவினர் மறியல் போராட்டம் :

வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வலியுறுத்தி திண்டிவனத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்/கடலூர்/கள்ளக்குறிச்சி

கடலூர்,விழுப்புரம், கள்ளக் குறிச்சியில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை தொடர்ந்து உறுதிப்படுத்திட கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி அதிமுக அரசு உத்தரவிட்டது. தற்போது திமுக அரசு இதற்கான அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையும் முடிந்துள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு தரப்பினர் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 10.5%இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடை தொடர்ந்து அமல்படுத்த கோரியும், இதுதொடர்பாக தமிழகஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் வலியுறுத்தி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் முன்னாள் எம்எல்ஏ பேராசிரியர் தீரன், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் முன்னாள் மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்கஜோதி, நாட்டார் மங்கலத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாறன், மரக்காணத்தில் ஒன்றிய செயலாளர் குமரன் தலைமையில் பாமகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, நடுவீரப்பட்டு, நெய்வேலி டவுன்ஷிப்,வடலூர் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூர் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி கண்டன உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் அருள், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன், தொழிற்சங்க நிர்வாகி வீரமணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது போல கடலூரில் சண்முத்துகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x