Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM
ஜெயங்கொண்டத்தில் நேற்று அதிகாலை வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது இடி தாக்கியதில், அந்த நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்ததில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மற்றும் அவரது பாட்டி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, ஜெயங்கொண்டம் தேவாங்க முதலியார் தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் (68) என்பவரது வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது அதிகாலை 4 மணியளவில் இடி தாக்கியது. இதில், தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி இடிந்து, அருகேயுள்ள ஆறுமுகம் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.
அப்போது, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தின் தாய் லட்சுமி (85), டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த ஆறுமுகத்தின் 3-வது மகன் அஜித்குமார்(25) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அஜித்குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு,இன்னும் 15 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT