Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

தமிழகத்தில் சிறந்து விளங்கும் சிலம்ப பயிற்சியாளர்கள் - 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு, சான்றிதழ் : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை

தமிழகம் முழுவதும் சிலம்பத்தில் சிறப்புப் பெற்று விளங்கும் பயிற்சியாளர்களில் 100 பேரை தேர்வு செய்து, தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியது:

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்து, கேலோ இந்தியா விளையாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. இதை, ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பத்தைக் கற்றுத்தேர்ந்த மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மேலும், சிலம்பத்தை பாடப் புத்தகத்தில் சேர்க்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சிலம்பத்தில் சிறப்புப் பெற்று விளங்கும் பயிற்சியாளர்களில் 100 பேரை தேர்வு செய்து, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ரூ.1 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் வெளியிட உள்ளார்.

தமிழக அரசு சார்பில் தேவையான இடங்களில் சிலம்ப பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் வனப்பரப்பை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதால், அனைவரும் தலா 10 மரக்கன்றுகளை நட வேண்டும். மேலும், அரசின் மரக்கன்று நடும் திட்டங்களுக்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ‘‘தமிழக அரசு அறிவித்துள்ள அண்ணா பிறந்த நாள் விழா, பொங்கல் விழாக்களின்போது சிலம்பப் போட்டியை நடத்துவதற்கான அனுமதியை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்துக்கு அளிக்க வேண்டும்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சிலம்பத்துக்கு தனி இருக்கை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சிலம்பத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு அமைக்கப்படும் குழுவில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் சிலம்பாட்டக் கழகத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x