Published : 30 Oct 2021 03:16 AM
Last Updated : 30 Oct 2021 03:16 AM
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை அலுவலக பயிற்சி மையத்தில், கடலோர திட்ட கிராம சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு தொழில் திறன் மேம்பாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
வனச்சரக அலுவலர் மற்றும் மண்டல அலுவலர் ரகுவரன் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் மற்றும் அறக்கட்டளை இயக்குநர் அபிஷேக் தோமர் பேசியதாவது:
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். இதனை யாரேனும் கடத்துவது குறித்த தகவல் கிடைத்தால், உடனடியாக தூத்துக்குடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு மாற்றாக வேறு தொழிலையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும், என்றார் அவர்.
உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்சய் நாராயணன் கலந்து கொண்டு, 53 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 70 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கினார். துணை மண்டல அலுவலர்கள் மதனகுமார், ராஜ்குமார், அருண்குமார் மற்றும் திட்ட களப்பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT