Published : 30 Oct 2021 03:16 AM
Last Updated : 30 Oct 2021 03:16 AM
செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம்ஏரி அருகே குப்பையை கொட்டி தீயிட்டு எரிக்கப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
தி.மலை மாவட்டம் செய்யாறு நகரையொட்டி பசும்பொன் நகர், மாயாண்டிபுரம், கீழ்புதுப்பாக்கம் உள்ளிட்ட விரிவு பகுதிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் கீழ்புதுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டவை ஆகும். 50 வீதிகளில் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை உள்ளிட்ட கழிவுகள், கீழ்புதுப்பாக்கம் ஏரி அருகே சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இக்குப்பைகள் காற்றில் பறந்து, ஏரியை மாசுப்படுத்தி வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “நெடும்பிறை சாலையில் கொட்டப்படும் குப்பைகள், காற்றில் அடித்து செல்லப்பட்டு ஏரியில் மிதந்து தண்ணீரை மாசுப்படுத்துகிறது. இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உணவுக் கழிவுகள், நெகிழி பொருட்கள் என சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளன. மழைக் காலங்களில் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது.குப்பையை தீயிட்டு எரிக்கப்படு வதால், அப்பகுதியை கடந்து செல்லும்போது, மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படுகிறது.
மேலும், குப்பையில் உள்ள நச்சுக் கழிவுகள், மழைக் காலங் களில் ஏரி நீருடன் கலந்து விடுகிறது. இதனால், குடிநீர் தேவைக்காக ஏரியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணற்றில் நீர் மாசு ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை பருகும் கிராம மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT