Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது, என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ. மா. ஷீலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்றதன் மூலம் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டில் இதுவரை 71 நபர்கள் தேர்ச்சி பெற்று வெவ்வேறு துறையில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இதன்படி தற்போது டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வார நாட்களில் நேரடியாக நடைபெற்று வருகிறது. இத்தேர்வுக்கான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், எஸ்எஸ்சி பேஸ் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளோர் தங்களின் விவரத்தை 04286 - 222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT