Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM
தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வந்த சாகுபடியாளர்களுக்கு கணினி சிட்டா வழங்கும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பயிர்க் கடன் வாங்கவும், பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோயில்கள், மடங்கள், ஆதீனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகளுக்கு சொந்தமான 3.36 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் குத்தகை அடிப்படையில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் இதுவரை தமிழக அரசின் இ-சேவைகளுக்கான இணையதள முகவரியில் கணினி சிட்டாவைபெற்று, அதை வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து பயிர்க் கடன் பெற்றும், பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தியும் வந்தனர்.
மேலும், இந்த கணினி சிட்டாக்களின் அடிப்படையிலேயே வேளாண் கருவிகளுக்கான மானியங்கள், சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பாசன திட்டங்களில் குத்தகை சாகுபடி விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில், செப்.20-ம் தேதிக்கு பின்னர், இ-சேவைகளுக்கான இணையதள முகவரியில் கணினி சிட்டா வழங்கும் சேவை முடக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் தற்போது செய்யப்பட்டு வரும் சம்பா சாகுபடிக்காக பயிர்க் கடன் பெறவும், பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தவும் முடியாமல் குத்தகை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் தகுதியானவர்கள் முன்கூட்டியே பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த மாவட்ட நிர்வாகங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால், குத்தகை சாகுபடியாளர்களின் கணினி சிட்டா பிரச்சினை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறியது:
தமிழகத்தில் குத்தகை சாகுபடிக்கான கணினி சிட்டா வழங்கும் சேவை முடக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பயிர்க் கடன் பெற முடியவில்லை. இதனால், பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கெனவே, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பிரதமரின் ஊக்கத் தொகையான ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், குத்தகை சாகுபடி செய் யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. தற்போது, பயிர்க் கடன் உள்ளிட்ட பலன்களும் இந்த விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டால், தமிழகத்தில் சாகுபடியின் பரப்பளவு குறைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழக்கம்போல கணினி சிட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மற்றும் தொடர்புடைய அமைச்சர், அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
இதுதொடர்பாக, வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த பிரச்சினையை தமிழக அரசின் துறை சார்ந்த செயலாளர்களின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றுள்ளோம். அரசிடமிருந்து விரைவில் நல்ல தகவல் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT