Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM
`திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் நவ.9-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 10-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவம் ஆகியவற்றுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை’ என, ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கிறது. விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கந்த சஷ்டி விழாவுக்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவைக் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் நவ. 9-ம் தேதி சூரசம்ஹாரமும், 10-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். நடப்பு ஆண்டு சூரசம்ஹாரமும், திருக்கல்யாணமும் கோயில் பிரகாரத்தில் நடைபெறும். இவ்விரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இவை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் 50 சதவீதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும். பக்தர்கள் கோயில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ அனுமதி இல்லை. தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பக்தர்களின் வசதிக்காக அடிப்படை தேவைகள் செய்யப்படுகின்றன.
கந்தசஷ்டி விழாவின்போது முதல் 6 நாட்கள், சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பது வழக்கம். தேவஸ்தானம் மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகளிலும், மடங்களிலும் பேக்கேஜ் முறையில் ஒருவார காலத்துக்கு முன்பதிவு செய்தும் பல ஆயிரம் பேர் தங்குவர். இந்த ஆண்டு இவை எங்கும் பக்தர்கள் முன்பதிவு செய்து தங்குவதற்கு அனுமதி இல்லை.
கோயிலுக்கு வருவோர் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்பது உறுதி செய்யப்படும். கோயில் வளாகத்தில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி மையம் செயல்படும். விழாவை முன்னிட்டு 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி விழா கொண்டாடப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT